Sunday, February 26, 2012

எங்கே(எவற்றை) விலைபேசுகிறோம் நாம்?

            பிரம்மாண்டத்திலும், ஆடம்பரத்திலும் மயங்கி கண்ணாடி குவளைக்குள் அடைக்கப்பட்ட காற்றாய் உருவமின்றி நம் எண்ணங்களும் அங்கும் இங்கும் அலைமோத தான் செய்கிறது! வலியவர்களின் வலிமையை கண்டு பிரம்மித்து நிற்ப்பதும், எளியவர்களை கண்டு ஏழனம் பேசுவதும், அவசியமற்றதற்கு ஆசைப்பட்டு அடிமையாய் போவதும் இன்னும் நாம் மனிதர்களாய் இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்துவிடும்! கைவிரல்களுக்குள் அடக்கிவைக்க வேண்டிய பணத் தேவைகளை பட்டம் விட்டு பறக்கச் செய்து அதற்கும் முண்டியடித்து அடையத் துடிக்கிறோம் மற்றவர்களை தாழ்த்தி! எதற்கு மயங்குகிறோம்? எதை நோக்கி பயணிக்கிறோம் என்றறியாமல் எனது எழுத்துக்களும் அர்த்தமின்றி! 

  
 பிரம்மாண்டமான பெரிய பெரிய வர்த்தக வளாகங்களில் நினைத்த விலையை விட அதிக விலை கொடுத்தேனும் விரும்பியதை வாங்கத் தயாராகிறோம்! அன்றாட வாழ்க்கைக்கே அன்றைய வருமானத்தை நம்பும் சிறிய கடைகளில் ஒரு கர்சீப் வாங்க 2, 3, ரூபாய் க்கு பேரம் பேசுகிறோம்! நம்மில் எத்தனை பேர் சொல்லியிருப்போம் "10000 ரூபாய் இந்த துனி ------ கடையில வாங்குனது! " என்றோ " காலையில வண்டிக்காரன் கிட்ட கேரட் வாங்கினேன் 15 ரூபாய் சொன்னான் குறைச்சு பேசி 12 ரூபாய்க்கு வாங்கினேன்! " என்றோ இங்கு நாம் எவற்றை விலை பேசுகிறோம்! வலியவர்களிடம் கொடுத்துவிட்டு எளியவர்களிடம் சுரண்டுகிறோம்!!! 


         இவை குடும்பத்தில் மட்டும் அல்ல! அங்கும் இங்கும் எங்கும் அனைத்தும்  நம்மை சுற்றியே! நம்மை அறியாமல் நம்மையும் தாக்குகிறதே??? முன்பெல்லாம் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேன்படுத்த பள்ளிகளால் சிறிய தொகைகள் பெற்றோர்களிடமிருந்து நன்கொடை என்று விருப்பத்தின் பேரில் வசூலிக்கப்படும்! இப்படி விருப்பத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட நன்கொடை 1000 ங்களில் ஆரம்பித்து இன்று இலட்சங்களில் வன்மையாக வசூலிக்கப்படுகிறது! நாம் இன்னும் அந்த பூஜியங்களில் தொலைந்து நிற்கிறோம்!"நன்கொடை" என்ற வார்த்தை அர்த்தம் தொலைந்து சுரண்டல் என்பதாகிவிட்டது! 
        இதனை அறிந்திருந்தும் நாம் இன்னும் நாம் கொடுக்கும் இலட்சங்களில் அங்கிருக்கும் கல்வித்தரத்தை அளந்து கொண்டிருக்கிறோம்! முதல் தலைமுறையாய் கல்லூரிக்கு போகட்டும் என பணத்தை கட்டி விட்டு பையனுக்கு வேலைக்காக காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை பேர்! "இவ்வளோ பணம் வாங்கறாங்க இங்க நல்லா சொல்லித்தருவாங்க! கண்டிப்பா என் பையனுக்கு வேலை கிடைச்சிடும்! " என்று ஒருமுறை அழுக்கு வேட்டிக்காரர் ஒருவர் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது! 

    
 "LKG க்கு நாளை முதல் அட்மிஷன் துவங்குகிறது! வேறு எந்த வகுப்பிற்கும் அட்மிஷன் கிடையாது " இது வேறு  ஒன்றும் இல்லை ஒரு பள்ளியில் நான் கண்ட அறிவிப்புப்பலகை! கொஞ்சம் அதிரவே வைத்தது விசாரித்தப்போது! வருடா வருடம் LKG க்கு மட்டுமே அட்மிஷன் நடக்கிறதாம்! இடையில் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்து வர விரும்பும் மாணவர்களை அந்த பள்ளியில் பெரிய வகுப்புகளில் சேர்க்க இயலாது! அதனால் எப்படியாவது இந்த பள்ளியில் பையனுக்கு(பொன்னுக்கு) சீட் வாங்கிடனும் என்று விடியலுக்கு முன் பள்ளியில் விழித்து நிற்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்!! சீட்டுக்காக சிபாரிசுக்கடிதமும் தேடுகிறார்கள்!(சிபாரிசுகளுக்கும் தனி விலை அங்கே!!)  


    எத்தனை இருப்பினும் வியாபார நோக்கில்லாமல் முடிந்த வரை நல்ல தரமான கல்வியை கொடுக்க முற்படும் நிறுவனங்களுக்கு ஏன் நாம் இன்னும் குழந்தைகளை சேர்க்க தயங்குகிறோம்! பணம் கம்மியாக கேட்பதே குறையாகிவிட்டது! கல்வித் தரத்தையும், ஆசிரியர்களையும் பார்த்து பள்ளி கல்லூரிகளை தேர்ந்தெடுத்தது போய் ஸ்மார்ட் க்ளாஸ் யும் நன்கொடையையும் பார்த்து தேர்ந்தெடுப்பதும்,  என் உயர் அதிகாரி பிள்ளை அங்கே தான் படிக்கிறது என் பிள்ளையும் அங்கே தான் படிக்க வேண்டும் என்று நம் தேவைகள் அடுத்தவர்களின் வாழ்க்கை தரத்தை சார்ந்திருப்பதை அறியாமலேயே தேர்ந்தெடுப்பதும் இங்கு எங்கே? எதற்கு? விலைபோகிறோம் , எவற்றை விலைபேசுகிறோம் நாம்????? நம்மை உயர்த்துகிறோம் என்கிற பெயரில் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டிருக்கிறோம்!

Tuesday, February 14, 2012

என் கல்லூரி சாலை!




      மேகம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சைக்கில்) பயணம் என்னுள் பதியாமல் பதிந்ததை பதிவுலகில் பதித்துவிட்டு போக வந்திருக்கிறேன்! 
   
   விலகாமல் விலகி நான் கண்விழிக்கும் மலைக்கோவிலை அணைத்துநிற்கும் மார்கழி மாதத்து பனிக்கு மத்தியில் கூப்பாடு போட்டு சிலிர்த்து நிற்கும் மயிலும், காலை நேரத்து தென்றலுக்கு வளையாமல்   வளையும் தென்னை மரங்களும் வணக்கம் சொல்லிவிட்டு போகுமே   கொஞ்சம் எனக்கும் சொல்வதாய்!  

           
  சில்வண்டுகளும் சில்லிட்டுபோகும் சில்லென்ற பனிக்காற்றில் பனிபோர்த்திய பாதையில் என் தனிமையோடு மல்லுக்கட்டி கீச்சிட்டுக்கொண்டே வரும் என் சைக்கிலும், எத்தனை பதட்டத்தில் வந்தாலும் என்னை திரும்பிப்பார்க்க வைத்துவிடும் தெரு முற்றத்து அம்மன் கோவிலும், என் மௌனம் களைத்துவிட்டு போகும், ஐந்துக்களின் கூக்குரலும் மனதோடு ஒட்டிக்கொண்டு துள்ளல் போடுமே நாள் முழுக்க! 

        
     மண்ணோடு ஒன்றி வளர்ந்துவிட போராடும் நட்டுவைத்த வாழைக்கன்றுகளுக்கு மத்தியில் புறாக்களின் சரசம் எனக்கு மட்டும் துள்ளியமாய் கேட்குமே! வழி நெடுக துணை வரும் என்னோடு, பூத்துனிற்கும் சாமங்கிப்பூவின் வாசமும் அம்மாவின் அறிவுரை சுவாசமும்! 

           
            " 'ச்ச' இவ்வளவு தூரம் தனியாக வந்துவிட்டேனா? " என நான் பிரம்மித்த என் கடந்த கால நினைவுகளை நினைவூட்டிப்போகும் மைல்கற்கள்! பனி முத்தங்களை ஏந்தி நானத்தில் வளையாமல் வளைந்து மருகும் புல்தரையின் அழகில் வார்த்தைகளை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் பல சமயம்! துரித வேகத்தில் 10 நிமிடங்களில் கடந்துவிட வேண்டிய என் பாதையை கடக்க எனக்கு மட்டும் 20 நிமிடங்கள் ஆகிறது! 


              கல்லூரிக்கு நேரமாகிய காலை பயனமே இப்படி கழிகையில் எனது மாலை நேரத்து பயனம் சொல்லவா வேண்டும்!!! மாலையும் அல்லாது இரவும் அல்லாத ஆறைத்தாண்டி மணி முல்லும் நொடி முல்லும் ஒட்டிக்கொள்ளும் இருள் கவ்வும் நேரத்தில் வண்டுகளின் கீச்சிடல்களும், மின்மினிப்பூச்சியின் ஒளியும் துணை வருமே வீடு திரும்புகையில்!! சோர்ந்து போகும் மாலை கூட சிலிர்த்துக்கொண்டு துள்ளி குதிக்கும் குஞ்சுகளோடு கூட்டம் கூட்டமாய் கூடு திரும்பும் பறவைகளை கண்டு!


இப்படியான என் நினைவுகளுக்கு உரிமை கொண்டாடி அடுத்த மார்கழிக்கு காத்திருக்கின்றன என் பாதைகள்!


Sunday, February 12, 2012

எனது பாதையின் முதல் மைல்கல்!

இந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குறிக்கோளோடும் இந்த பதிவினை பகிர்கிறேன். பதிவுலகில் எனது வலைப்பூவை பதியமிட்ட சில மாதங்களில் "Versatile Blogger Award" கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. முத்தாய் மாற வித்தாகும் சிற்பிக்குள் மழைத்துளியாய் இந்த பரிசினை நான் திரு ரமணி ஐயாவிடம் இருந்து ஏற்கிறேன்.மேலும் எனது அனைத்து பதிவுகளையும் வாசித்து தகுந்த பின்னூட்டங்களை இட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கும், அவரது விருதுக்கும் (ஊக்கப் பரிசுக்கும்) நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்


பிடித்ததும் ரசிப்பதும்
  • அம்மாவுடனான நேரங்கள்
  • மழை
  • வலைப்பூ இடுகைகள்
  • லிட்டில்  சிஸ்டர்ஸ் ஹோமும்(முதியோர் இல்லம்) அங்கிருக்கும் எனது தோழரும்
  • சைக்கில் பயணம்
  • குழந்தைகளின் மழலைப்பேச்சு
  • தனிமையில் இதயத்துடிப்பின் ஓசையை ரசிப்பது 
விருதினை பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள் 
  • மனதின் உணர்வுகளை வெளிப்படையாய் அழகிய நடையில் பதிக்கும்  கலை  அவர்களுடனும் 
  • வரிகளில் எதார்த்தத்தையும் பல அறிவியல் துணுக்குகளையும் பகிரும்  விச்சு   அவர்களுடனும் 
  • வாழ்வின் எதார்த்தங்களை எளிய நடையில் பதிக்கும்  வே.சுப்பிரமணியம்  அவர்களுடனும் 
  • சொல்ல வந்த கருத்தினை மிக தெளிவாக சொல்லும்  கடம்பவனக் குயில்  அவர்களுடனும் 
  • சமூக சிந்தனையுடன் பல கருத்துக்களை முன்வைக்கும்  சீனி  அவர்களுடனும் 
நான் இந்த விருதினை பகிர விரும்புகிறேன். தாங்களும் இந்த விருதினை உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.