Saturday, January 6, 2018

நாற்று ஒன்று பேசினால்!விதை நெல்லாய் வீசப்படுகையில் 
பாறையில் பட்டு தெறித்து 
கல்லிடுக்கில் ஈரம் கண்டு 
வற்றும் முன் துளிர்விட்டேன் 
கற்பாறை என்றறியாது!

நீர் வற்றிப்போகையில் 
மழைத்துளிக்கு காத்திருந்தேன் 
காற்றடித்து சென்றதே 
கார்மேகம் நிரம்பி 
மழை வரக்காண்கையில்!

அடித்த காற்றில்
தூக்கி எறியப்பட்டு
நடை பாதையில்
வீீழ்கையில்
தாகம் தலைக்கேற
நாவரட்சியில்
மயங்கிப்போனேன்!

அரிசிப்பருக்கையில்
எழுதப்படுமே மனிதப்பெயர்
என் கருவில் உயிற்கொள்ளும்
அரிசியிலும் யார்பெயரேனும்
எழுத்தப்பட்டிருக்குமா?
அல்லது என் பிறப்பின்
பயனடையாது இப்படியே
மடிந்துபோவேனா?
கனா காண்கிறேன்
வரட்சியின் மயக்கத்தில்!

நாற்றொன்றும் 
வீணாய் போகாது காக்க அன்றொரு விவசாயி
உண்டெனக்கு,
அவன் என் வழி வர 
காத்திருக்கிறேன் இன்று
தாகத்தில்!

என்னை
கவனியாது போகும்
வழிப்போக்கர்கள்..
என்னை மிதித்து போக
நினைக்கும்
பெருநிறுவன கலாச்சாரம்..
காக்க மனதிருந்தும்
வழியில்லாத இயலாதவர்கள்..
வழியிருந்தும் மனமில்லாத
இருக்கிறவர்கள்..
என அனைவரும்
என்னை கடந்து போக
ஒருவராலும் உயிர்பிழைக்க
காத்திருந்து துவண்டுபோனேன்..

இனி பெலன்கொள்ள
காலமில்லை
என் சந்ததி பெருக
பூமியுமில்லை..

என்னை தலையில்
சுமந்து கொண்டாடிய
நாட்கள் ஓய்ந்தது..
இன்று மிதிபட்டு
சாகும் காலம் கடக்கிறேன்..

கலியுக விந்தையில் தோற்கிற
இயற்கையின் வறுமையில்
மலடியானேன் நான்..
தாங்கி சுமக்கும் 
என் உழவனை இழந்து
விதவையும் ஆனேன்..
வேரூன்ற நிலமுமின்றி
உடன்கட்டை ஏற விழைகிறேன் 
என்னவனோடு..

மனிதகருவிலும் கலப்படம்
காணும் விஞ்ஞானம்
நான் மட்டும்
தப்பிப்பிழைப்பதெப்படி...
இயல்பாய் கிடைத்த
இயற்கை வேளாண்மை
பொருட்கள் இன்று
இல்லாதவனுக்கு
இல்லாததாகிவிட்டது...
செயற்கை எங்கும் சிதறி
எண்ணிமுடியாததாய் இருக்கிறது..

மாயை கண்டு வியந்து
என்னை அழித்து
அழிவை தேடுகின்ற
மனிதமே...
எனக்கு விடைகொடு...Tuesday, January 2, 2018

வழிப்போக்கன் நான்!கனா காணாதே
நான் வருவேன் என்று!
நான் வெறும் வழிப்போக்கன்!
உடன் இருந்ததால் உதவினேன்
உன் தேவையின் போது,
மீண்டும் எதிர்பார்க்காதே!

என்னை நினைத்துக்கொள்
உன் உதவி ஒருவருக்கு
தேவையாயின்!
உன் அறியாமையில்
வழிகாட்ட கடந்து வந்தேன்
வழியில் பயணிக்க அல்ல!

இன்று உனக்கு நாளை
வேறொருவருக்கு என்று
வேற்றுமையின்றி பெய்யும்
மழைத்துளி போல் நான்
சேரும் இடம் வரை
கடந்து செல்கிறேன்
பலரை பலவற்றை,
தேவையான இடத்தில்
தேவைக்கேற்ப என்னை
உருவேற்படுத்தும் காலம்
இன்று உனக்கென
கடக்க செய்தது என்னை!

உறவென்று
என்னை உனக்கென்று
தேக்கிவைத்தால் தோற்றுப்போவாய்
நான் வற்றிப்போகையில்!

மனதின் எண்ணமும்
கைகளின் பிராயசமுமே
பலனளிக்கும்,
அதிர்ஷ்டம் என்றும்
நல்ல நேரம் என்றும்
என்னை அழைத்து
அள்ளிக்கொண்டாலும்! 

Sunday, December 31, 2017

நேசிப்போம்!


வருடங்கள் பல கடந்தோம்!
வாழ்ந்தென்ன செய்தோம்?
சாதனைகள் பல புரிந்தோம்!
திரும்பிப்பார்க்கையில்
உடன் இருப்பவர்களை கவனித்தோமா?
உறவை தாங்கினோமா?
உணர்வை புரிந்தோமா?
நேசிக்கப்படுவதை அதிகம்
விரும்பும் நாம்
அவ்வளவு அதிகம்
நேசித்தோமா?
எல்லோரையும் நேசிப்போம்!
எல்லாவற்றையும் நேசித்து செய்வோம்!
வாழும் வாழ்க்கை 
சலித்துப் போகாதிருக்க!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Sunday, December 24, 2017

எண்ணம்போல்!(மீதமாய் போவேனோ நானும்-பகுதி-3)

          நம் வாழ்வு நம் எண்ணம் போலே அமையும். நல்லதும் கெட்டதும் நம் பார்வையினுடையது அல்ல நம் மனதினுடையது. ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் இப்படி தான் என முடிவு செய்து பழக ஆரம்பித்தால் அதுவே அவர்கள் குணம் என்று நம் மனது நம்பி அதை தாண்டி அவர்களை தெரிந்து கொள்ளாது. பின்பு அவர்கள் நிஜ முகம் காண்கையில் நிச்சயம் இரண்டில் ஒன்றை அடைவோம் ஏமாறுதல் அல்லது குற்ற உணர்வு.


              நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பார்த்தவுடன் ஒருவரை நம்பி அனைத்தையும் பகிர்வது, நாம் ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்கையில் கவனிக்கவேண்டியது என்ன விஷயம் பகிர்கிறோம், யாரிடம், எந்த சூழலில், எந்த மனநிலையில். காரணம் நாம் அனைத்தையும் பகிர்வது நம்மை பற்றும் கைபிடியை அவர்களுக்கு கொடுப்பது போல. நாளை நாம் பணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம். நம் சுதந்திரம் பறிபோகும். மனதளவில் அடிமையாக வேண்டி இருக்கும்.
              அதேபோல் சில சூழ்நிலைகளில் நாம் உணர்ச்சிவசப்படும் போது பேசாதிருப்பதே நலம். நாம் பேசவேண்டியவர்களுடனான நமது உறவு சரியில்லை என்றால் அதன் கோபம், வெறுப்பு, பழைய நிகழ்வுகளை நம் மனது தேடிப்பிடித்து பேசித்தீர்த்திட துடிக்கும். அந்நேரத்தில் நாம் நிதானமிழந்து பேசுகிறபோது உறவு முறியும். நிதானமில்லாதிருக்கையில் பேசத்திருப்பதே சாலச்சிறந்தது.


                  பலநேரம் நாம் கண்டதும், கேட்டதுமான சில விஷயங்களை அலசி ஆராய்ந்து உண்மை எது, பொய் எது என்று அறியாமல் அதை பகிர விழைகிறோம். அதனால் பாதிக்கப்படுவது நம்மைப்போல் ரத்தமும், சதையும், உணர்வும், உயிரும் உள்ள ஒருவரே. எண்ணங்களை அடக்காவிடில் மனதை அடக்க இயலாது. மனதை அடக்காவிடில் நாவை அடக்க இயலாது, உறவையும் காக்க இயலாது. வாழ்க்கை பாடத்தை கற்றல் அழகு! அறிவாய் கற்போம், அன்பாய் கடப்போம்! உறவுகளையும் தாங்குவோம் நேசத்தால் நல்ல எண்ணத்தால்...


மீதமாய் போவேனோ நானும்- பகுதி - 1

மீதமாய் போவேனோ நானும்! - பகுதி - 2
Thursday, December 21, 2017

ஈரம்!


அறியேன் விதையிட்ட விரல்களை!
அடைக்காத்த மண்ணும் இங்கில்லை!
தூக்கி எறியப்பட்ட 
இடமும் தெரியவில்லை!
பாவமென்று ஈரமான இடத்தில்
நட்டுவைத்தவர் எவரோ
அவர் முகமும் அறியேன்
நன்றி சொல்ல!
நாட்டப்பட்ட இடத்தில்
அவ்வப்போது நனைத்துபோகும்
மழைத்துளியை சேகரித்து
வேரூன்றிய நினைவுகள் தீண்ட..
இன்று பனைமரம் போல் நின்றாலும்
எனது பெயரோ
அறியாதவர்களுக்கு 'அனாதை'
அறிந்தவர்களுக்கு 'ஆதரவற்றவன்'
புரியாதவர்களுக்கு 'இல்லாதவன்'
புரிந்தவர்களுக்கு 'நண்பன்'..
வருடங்கள் கடந்தும்
என் பெயரை
மாற்றத்துணியாத காலம்
இன்று கொடுக்கும் பதில்..
என்னருகே திடிரென்று துளிர்த்த
இளந்தளிரை காண்கையில்
தாராளமாய் பகிர
என் வேரில் சுரக்கும் ஈரம்!
பகிர மனமும் உண்டு
வேரூன்ற பெலனுமுண்டு
நான் தத்துக்கொடுத்தேன்
என் பெயரை!

Friday, December 1, 2017

குவளைக்குள் நான்!

வியந்து தவிக்கிறேன்
சுருங்கிப்போன
என் உலகத்தை கண்டு!
என் கைப்பேசியின்
உருவமில்லா பொத்தானை
அழுத்தி அழுத்தி
தேய்ந்து போவது
என் விரல் நுனியோடு
என் மனதும்!

என் பள்ளிப்பருவத்து தோழியோடு
கடிதத்தில் நீடித்த நட்பு
காணாமல் போனது
கைபேசி வந்தவுடன்..
அவளுக்கும் எனக்கும்
நேரமில்லை
கடிதம் எழுதவும் படிக்கவும்..
பின்னொருமுறை அவளிடம்
பேசியதான ஞாபகத்தோடு
தொலைந்துபோனது நட்பும்!

தொலைவிலிருந்து வரும்
பிறந்தநாள் வாழ்த்தட்டையை
எதிர்பார்த்து
தபால்காரருக்கு காத்திருந்த
நாட்களில் கற்றுக்கொண்ட
பொறுமையை இழக்கிறேன்..
இன்று ஒருமுறை அழைப்பை
ஏற்காவிடில் "தாங்கள் அழைத்த எண் தற்போது அணைத்து
வைக்கப்பட்டுள்ளது." என்று
கேட்கையில்...சேகரித்து வைத்த
கடிதங்களும்
பகிர்ந்து கொண்ட
பரிசுகளும்
வாதாடி மீட்குமே
கோபத்திலும் வெறுப்பிலும்
தொலைத்த உறவை..
இன்று அந்த மீட்பையும்
உருவமில்லா உணர்வில்லா
மேகத்தில் சேகரித்து
மறந்தும்போகிறோம் காணாது
இதற்கும் தேடுகிறேன்
நினைவூட்டல் அமைப்பை!என் இளம்பிராயத்து
நினைவுகளை என்
மனதில் பதிந்திருக்கிறேன்..
என் நண்பர்களோடு பேசி விளையாடிய
நாட்களை இன்று நினைவூட்டிக்கொள்ள!
தருணங்களை பதிவு செய்ய
அன்று என்னிடம் எந்த 
கேமராக்களும் இல்லை..
சேகரித்து வைக்க எந்த
மேகமும் இல்லை..
அதனாலே இன்றும்
நட்பும் அன்பும் என் மனதோடு!

அன்று பல கை மாறி 
மூட்டைக்குள் சிக்கி தவித்து 
கசங்கி கை சேரும்
அந்த வெற்று காகிதத்தில்
வெட்ட வெளிச்சமாய்
காட்டப்பட்ட உணர்வுகள்
இன்று குறுஞ்செய்தியில்
வெட்டப்பட்டு ஒட்டப்பட்டு
எத்தனை ஸ்மைலீக்கள் போட்டாலும் அவை
என் மனதை எட்டாது போகிற
ரகசியம் அறியேன் நான்!


முகமும் அறியாத
முகவரியும் அறியாத
முகபுத்தக நண்பர்களிடம்
முகமூடி அணிந்து..
என்னில் இல்லாத 
என்னை காண்பித்து..
அவர்கள் மனதில்
என் உருவம் பதிக்க பாடுபட்டு..
என்றோ ஒருநாள்
என் முகம் வெளிப்பட
மாயமாய் போன நட்பில்
வீணாய் போகுதே காலம்!

உறவுகளிடம் கொடுக்க மறந்த
என் விடுமுறை நாட்களை
இரவறியாது பகலறியாது
திருடிப்போகிறது
கைப்பேசி விளையாட்டுக்கள்!


நானும் குவளைக்குள் தான்
இருக்கிறேன்!
எல்லோரும் இருக்கும்
அதே இடத்தில்!
மாயைக்குள் தத்தளித்து
நிஜஉலகம் கண்டு ரசித்து
நெருங்கும்போதே
தினரிப்போகிறேன்
குவளைக்குள் இருப்பதை அறிந்து!

மாயமான கண்ணாடி சுவற்றை
உடைக்கையில் சிதறிய
உணர்வுகளை களைந்தெரிந்து
வேர்கொள்கிறேன் நிஜத்தில்!